Wednesday, 4 April 2018

களத்தில் வங்கி ஊழியர்கள்!


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி நாளை (ஏப்ரல் 5) வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழகத் தலைவர் தமிழரசு இன்று (ஏப்ரல் 4) அறிவித்துள்ளார்.

6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைக்கப்படாததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன.

நேற்று (ஏப்ரல் 3) கடையடைப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதில் மாநிலம் முழுவதும் சுமார் 30,000 மருந்துக் கடைகளும் மூடப்பட்டன. நாளை திமுக தலைமையில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களும், வணிகர் சங்கங்களும் கலந்துகொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தங்களது ஆதரவை முழுமையாகத் தரவுள்ளதாக விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழகத் தலைவர் தமிழரசு தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும் போராட்டத்தில் வங்கி ஊழியர்களும் கலந்துகொள்வார்கள் என்றும் கூறியுள்ளார். தேவைப்பட்டால் தனியாகவும் போராடுவோம் என வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதனால் நாளை வங்கிகள் செயல்படாது என்று கூறப்படுகிறது. அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதால் தமிழகமே ஸ்தம்பிக்கவுள்ளது.

தமிழகம் போன்று புதுச்சேரியிலும் போராட்டம் நடைபெறவுள்ளதால் நாளை அம்மாநிலத்தின் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment