Monday, 9 April 2018

காலரா: கலெக்டர்களுக்கு எச்சரிக்கை!


காலரா போன்ற தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்க, மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலரா குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அதிகாரிகளுக்கும், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் கா. பாஸ்கரன் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில், "ஊரகப் பகுதிகளில், காலரா மற்றும் தொற்று நோய் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறையிடமிருந்து தகவல் வந்துள்ளது. எனவே, 'காலரா' பரவுவதைத் தடுக்கும் வகையில் தனிக்கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

சுகாதாரமற்ற குடிநீர் பயன்பாட்டைத் தடுத்து, சுகாதாரமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். கிராம ஊராட்சிகளில் உள்ள, நீர் தேக்கத் தொட்டிகள் போன்ற எல்லாத் தொட்டிகளையும், 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். அவற்றை மூடி வைக்க வேனும். நீர் ஏற்றும் போது குளோரினேஷன் செய்ய வேண்டும். இவையெல்லாம், சரிவர நடப்பதைக் களப் பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் கிராம ஊராட்சியில் பாதிப்பு ஏதேனும் தெரிந்தால், அந்த ஊராட்சியும், அருகிலுள்ள ஊராட்சிகளிலும் பரிசோதனை மேற்கொண்டு கவனிக்க வேண்டும். தினமும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரிடமிருந்து, கிராமப் பகுதியில் பரவும் தொற்று நோய்கள் குறித்து அறிக்கையைப் பெற்று, களப் பணியாளர்கள் உதவியுடன் நோய்த் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கிராமப்புறங்களில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகளை உடனடியாக சுத்தம் செய்து, குளோரினேஷன் செய்வதை 100 சதவீதம் உறுதி செய்து, அறிக்கை அனுப்ப வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருவருக்கு காலரா நோய் இருப்பது கடந்த மாதம் (மார்ச்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் காலரா நோய் வந்துள்ளது. இதனையடுத்து, காலரா தடுப்பு, காலரா குறித்த விழிப்புணர்வு ஆகிய நடவடிக்கைகளில் சுகாதாரத் துறை ஈடுபட்டுவருகிறது.

No comments:

Post a Comment