Thursday, 12 April 2018

மணமகள் சம்மதம் அவசியம்: உச்ச நீதிமன்றம்!


இந்து திருமணச் சட்டத்தில் திருமணம் செய்யும் மணமகளின் ஒப்புதல் அவசியம் என உச்ச நீதிமன்றம் நேற்று (ஏப்ரல் 11) தெரிவித்துள்ளது.

டெல்லியில், டெல்லி மகளிர் ஆணையம் உதவியோடு தங்கியிருக்கும் கர்நாடக பெண் ஒருவர், தனது விருப்பத்தை மீறி பெற்றோர் திருமணம் செய்து வைத்ததாகவும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘இந்து திருமணச் சட்டத்திலுள்ள சில விதிமுறைகளை மாற்றம் செய்ய வேண்டும். திருமணம் செய்யும் மணமகன் அல்லது மணமகள் விருப்பத்தின் அடிப்படையில் திருமணம் நடப்பது கட்டாயமாக்கப்படவில்லை. அதை மாற்ற வேண்டும்’ எனக் கூறினார்.

இந்த மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் கான்வில்கர் மற்றும் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதம் செய்தார்.

இந்து திருமணச் சட்டம் 12சி பிரிவின்படி கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்டால், அதை ரத்து செய்ய முடியும் என்பதை சுட்டிக்காட்டியது. பின்பு, இந்து திருமண சட்டத்தில் திருமணம் செய்யும் மணமகளின் ஒப்புதல் அவசியம் எனத் தெரிவித்த நீதிபதிகள், கர்நாடகப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை மே 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment