Tuesday, 10 April 2018

கூட்டுறவு தேர்தலுக்கு தடை : குழப்பத்தில் அதிமுக!!!

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி, கூட்டுறவு சங்கத் தேர்தல்கள்
அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுவதாக கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்திலுள்ள 18,435 கூட்டுறவு சங்கங்களுக்கான பல கட்ட தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 5ஆம் தேதி தேர்தல் ஆணையரால் வெளியிடப்பட்டது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி பல்வேறு இடங்களில் மோதலும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. மேலும் தேர்தலுக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருந்தது.
கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் திமுக கொறடா சக்கரபாணி மனுதாக்கல் செய்திருந்தார். அதில், "கிடைத்த ஆவணங்கள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் கூட்டுறவு தேர்தல்கள் முறையாக நடக்கவில்லை. ஆளுங்கட்சியினருக்கு சாதமாகவே நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஆளுங்கட்சியினரே தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்" என்று குற்ற சாட்டிய அவர், விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் தெரிந்தும், புகார்கள் வந்தும் தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூட்டுறவு தேர்தலுக்கு பின்னர், அவற்றை எதிர்த்தும், குறைகள் குறித்தும் முறையிட சட்டரீதியான தொழில்நுட்பம் இல்லை. ஆணையத்தின் கீழ் நடப்பதால் மாவட்ட அளவிலான அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
"எனவே, கூட்டுறவு தேர்தல் தொடர்பாக கடந்த மார்ச் 5ல் வெளியிடப்பட்ட அறிவிப்பும், அதன்படி நடந்த தேர்தல்களும் சட்டவிரோதம் என்பதால், செல்லாது என அறிவித்து, சட்டவிதிகளுக்கு உட்பட்டு முறையாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்" என்று வேண்டுகோளும் விடுத்திருந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது கொண்ட அமர்வு, "தற்போதைய நிலையே தொடர வேண்டும் (STATUS QUO )எனவும், அதாவது கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக வேட்பு மனுக்களை வாங்கவோ, வேட்பு மனுக்களைப் பரிசீலிக்கவோ அடுத்த கட்ட தேர்தல் தொடர்பாக எந்தவித தேர்தல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும், இதுகுறித்து தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கான மாநில தேர்தல் ஆணையர் விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகள் தற்போது எந்த நிலையில் உள்ளனவோ அதே நிலையில்தான் ( STATUS QUO) இருத்தல் வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது. ஆகவே ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பின்படி தற்போது நடைபெற்று வரும் அனைத்துத் தேர்தல் நடவடிக்கைகளும், ஆணையத்திலிருந்து மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையானது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்களுக்கும், அனைத்து மாவட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல் அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குழப்பத்தில் அதிமுக
அதிமுகவில் உள்ள அனைத்துத் தரப்பினரையும் தனது பக்கம் கொண்டு வரும் வகையில் ஆளுந்தரப்பு கூட்டுறவு சங்கத் தேர்தலில் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவால் இனி கூட்டுறவுத் தேர்தல் எப்போது நடைபெறும் என்ற கேள்வியே நீடிக்கிறது. இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றதன் பின்னணியிலும் உட்கட்சிப் பூசல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே கூட்டுறவு சங்கத் தேர்தல் மூலம் அதிருப்தியாளர்களை சரிகட்ட ஆளும் தரப்பு திட்டமிட்ட நிலையில், தேர்தல் நிறுத்தி வைப்பு மூலம் அதிமுகவில் குழப்பம் தொடர்கிறது.

No comments:

Post a Comment