Friday, 13 April 2018

வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள்... போராட்டம் ! ஊதியம் வழங்குவதில் இழுபறியால் ஆவேசம்!!!

உடுமலை:ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை கண்டித்து, தேசிய ஊரக வேலை உறுதி
திட்டப்பணியாளர்கள், உடுமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை ஒன்றியத்திலுள்ள, 38 ஊராட்சிகளிலும், நுாற்றுக்கும் மேற்பட்ட தேசிய ஊரக வேலை உறுதி திட்டபணியாளர்கள் பணி செய்கின்றனர். குளம், குட்டை துார்வாருதல் துவங்கி, துாய்மைக் காவலர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும், இப்பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இப்பணியாளர்களுக்கு, நாள் ஒன்றுக்கு, 203 ரூபாய் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிலிருந்து, ஊதியம், 224 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பெண்களுக்கு வேலைவாய்ப்பளிக்கவும் மத்திய அரசு இத்திட்டத்தை துவக்கியது. வறட்சியால், உடுமலை பகுதியில், விவசாய சாகுபடி பணிகள் ஏதுமில்லாததால், இத்திட்ட பணிகளை மட்டுமே தொழிலாளர்கள் நம்பியுள்ளனர்.திட்டத்திலுள்ள சில குளறுபடிகளால், தொடர்ந்து பாதிக்கப்படுவதாக தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், உடுமலை ஒன்றிய அலுவலகத்தை ஜல்லிபட்டி, கொடிங்கியம், பாப்பனுாத்து உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்கள், முற்றுகையிட்டனர்.
இத்திட்டத்தின் படி ஓராண்டுக்கு, நுாறு நாட்கள் பணி வழங்கப்பட்டு அதற்கான ஊதியம் வழங்கப்படும். இங்குள்ள பணியாளர்களுக்கு, தொடர்ச்சியாக, நுாறு நாட்கள் பணி தரப்படுவதில்லை. கடந்த இரண்டு மாதங்களாக ஊதியமும் வழங்கப்படவில்லை. இப்பிரச்னைகளை தீர்வு காண வலியுறுத்தி, முற்றுகையிட்ட தொழிலாளர்கள், 'தாமதமாகும், ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும், பணி நாட்கள் முழுமையாக நியமிக்க வேண்டும்,' என கோஷமிட்டு, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
வேலை உறுதி திட்டப்பணியாளர்கள் கூறுகையில்,' திட்டத்தில், முழுமையான ஊதியம் எவ்வளவு என்பதே இதுவரை தெரியாது. இதுவரை செய்த பணிகளுக்கான ஊதியமும் வழங்கவில்லை. ஊதியம் வழங்குவதில் தாமதப்படுத்துவதால், அன்றாட செலவுகளுக்கும் கடன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது,' என்றனர். இதே போல், குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகங்கள் முன்பு, விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில், போராட்டம் நடந்தது

No comments:

Post a Comment