Wednesday, 11 April 2018

மாணவர் சேர்க்கை படிவத்தில் சர்ச்சைக்குரிய கேள்வி!!!


ஹரியானா பள்ளிகளில் அளிக்கப்படும் புதிய மாணவர் சேர்க்கை படிவங்களில், பெற்றோர்களின் பணி குறித்து கேட்கப்பட்டுள்ள கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான படிவங்களில் பெற்றோரின் பணி குறித்து கேட்கப்படும். ஆனால், ஹரியானா பள்ளிகளில் வழங்கப்படும் மாணவர் சேர்க்கை படிவங்களில், உங்களின் பெற்றோர் அசுத்தமான பணியில் ஈடுபட்டுள்ளார்களா? எனக் கேட்கப்பட்டுள்ளது. மேலும்,பெற்றோரின் ஆதார் எண், மரபணுக் கோளாறுகள் உள்ளதா? உடல் அல்லது மன குறைபாடுகள் உள்ளதா? உங்களின் பெற்றோர் வருமான வரியை சரியாக செலுத்துகிறார்களா? உங்களின் மதம்? உங்களின் சாதி? உள்ளிட்ட 100 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதில் பணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பெற்றோர்கள் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற விவரங்களை ஹரியானா கல்வித் துறை கேட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் பள்ளிகள் கேட்கவில்லை எனத் தனியார் பள்ளி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



குர்கானில் உள்ள பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் அதிதி மிஸ்ரா, மாணவர் சேர்க்கைக்கு படிவங்களை பெற்றோர்களிடமிருந்து பூர்த்தி செய்து வாங்க அரசு உத்தரவிட்டுள்ளது. வருமானம் அல்லது வங்கி கணக்கு அறிக்கைகள் போன்ற சில விவரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு சில பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர். பொதுவாக இதுபோன்ற விவரங்களை நாங்கள் கேட்பதில்லை. ஆனால், அரசாங்கம் கேட்க சொல்லி உத்தரவிட்டுள்ளது. எனவே,ஆட்சேபனைகள் இருந்தால், அவர்கள் ஹரியானா அரசாங்கத்தின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்” எனத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

இதற்கிடையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் இனம், மதம் உள்ளிட்ட சுயவிவரங்களை கண்காணிப்பது நியாயமற்றது என ஹரியானாவில் ஆளும் பாஜக அரசுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்டீப் சுர்ஜேவாலா தனது டிவிட்டர் பக்கத்தில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் ஆட்சியின் மீது குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மாணவர்களை தீண்டத்தகாதவர்களாகவும், அவர்களின் பெற்றோர்களின் பணியை அசுத்தமானதாகவும் ஹரியானா அரசு அடையாளப்படுத்துகிறது. பெற்றோரின் தனிப்பட்ட தகவல்களைக் கேட்பது பைத்தியகாரத்தனத்தின் உச்சம். அசுத்தமானவர்கள் எனப் பெற்றோர்களை அழைப்பது அபத்தமானது” எனத் தெரிவித்துள்ளார்.

குருகிராமை சேர்ந்த பெற்றோர், “பள்ளியில் குழந்தைகளை சேர்க்க எப்போதிலிருந்து ஆதார் கட்டாயமாக்கப்பட்டது? சர்ச்சைக்குரிய வகையில் முக்கியமான தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்படுகின்றன. ஆனால், அவற்றைப் பகிர்ந்து கொள்ளப் பல பெற்றோர்கள் விரும்புவதில்லை.

கலப்பு திருமணம் செய்துகொண்ட இந்து மற்றும் சீக்கியர்கள் அதிகளவில் உள்ளனர். தாயும், தந்தையும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்களின் குழந்தைகள் எந்த மதத்தைக் குறிப்பிட வேண்டும்? மாணவர் வங்கி கணக்கு விவரங்களை அவர்கள் ஏன் கேட்க வேண்டும்? மதம் மற்றும் சாதி பற்றிய விவரங்களைக் கேட்பது மாணவர்களைப் புண்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஹரியானா பாஜக செய்தித் தொடர்பாளர் ராமன் மாலிக், சேர்க்கை படிவங்களில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அரசாங்கத்துக்கு உதவியாக இருக்கும். ஒரு மாணவருக்கு மருத்துவ பரிசோதனை அல்லது சிறப்பு கவனம் தேவைப்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே அத்தகைய விவரங்கள் கேட்கப்படுகின்றன. அத்தகைய தகவல்களால், கல்வியைப் பெறுவதில் எந்த சமூகம் பின் தங்கியுள்ளது என்பது குறித்து அரசாங்கம் அறிந்து கொள்ள முடியும். அதன்மூலம், சரியான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும்” எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment