Thursday, 5 April 2018

தரமான உணவு வழங்கப்படும் : மத்திய பல்கலைக்கழகம்!


திருவாரூரில், மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் தரமான உணவு வழங்கக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, தரமான உணவு வழங்கப்படும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் அருகே நீலக்குடியில் மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். கடந்த சில வாரங்களாகவே பல்கலைக்கழக உணவகத்தில் தரமான உணவு வழங்கப்படுவது இல்லை என மாணவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் அதைக் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், மார்ச் 29ஆம் தேதி, சமையலில் பயன்படுத்துவதற்காக 8 பாக்கெட்களில் மோனோ சோடியம் குலூட்டோமேட் வாங்கி வைத்திருப்பதை கண்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதைத் தொடர்ந்து, தரமான உணவு வழங்கக் கோரி ஏப்ரல் 3ஆம் தேதி மாலை முதல் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், “உணவகத்தில் ஒவ்வொரு ஆண்டும் உணவக ஒப்பந்ததாரரை மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றும் போது உணவின் சுவை, தரம் முறையாகப் பின்பற்றப்படும். உணவும் மாற்றி வழங்கப்படுவதால் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உணவுகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியும். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்பந்ததாரரை மாற்றியமைக்காமல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சாய் கேட்டரர்ஸ் என்னும் ஒப்பந்ததாரர் மூலமே உணவு வழங்கி வருகிறது. இதனால், தரக்குறைவான உணவைத்தான் உண்டு வருகிறோம். உணவில், சோடாபூ, மோனோ சோடியம் குலூட்டோமேட் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை சேர்க்கின்றனர். உணவின் தரத்தை ஆய்வு செய்ய ஆசிரியர் குழுவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னாள் ராணுவ வீரர்களை கொண்ட குழுவும் உள்ளது. ஆனால் அவர்கள் உணவின் தரம் குறித்துக் கண்டுகொள்வதில்லை. தரமற்ற உணவால் உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே உணவகத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும். உணவின் தரத்தை பல்கலைக்கழகம் உறுதி செய்ய வேண்டும். சாய் கேட்டரர்ஸ் ஒப்பந்ததாரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க வேண்டும்” எனக் கூறினர்.
அதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை ஏப்ரல் 4ஆம் தேதி இரவுக்குள் விடுதியை காலி செய்து வீட்டிற்கு செல்ல வேண்டும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஏப்ரல் 9 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்றும், புதிய கேட்டரிங் ஒப்பந்ததாரர்கள் மூலம் தரமான உணவு வழங்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment