Tuesday, 10 April 2018

லஞ்சம்: சென்னை கேவிஎஸ் பள்ளி முதல்வர் கைது!


ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரை சிபிஐ கைது செய்துள்ளது.

தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. சென்னை அசோக் நகரிலும் இப்பள்ளி அமைந்துள்ளது. இதன் தலைமையாசிரியராக இ.ஆனந்தன் பணியாற்றிவருகிறார்.

கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவந்துள்ளது. இந்நிலையில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் சேர்க்கைக்கு ஆனந்தன் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் தர ஒப்புக்கொண்ட பெற்றோர் இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளனர். அப்போது ரசாயனம் தடவிய பணத்தை சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் அளித்து, பள்ளி முதல்வரிடம் கொடுக்குமாறு தெரிவித்தனர்.

அதன்படி இன்று (ஏப்ரல் 10) காலை பள்ளி வளாகத்திற்குள்ளேயே உள்ள முதல்வரின் வீட்டில் வைத்துப் பெற்றோர் ரூ. 1 லட்சம் லஞ்சப் பணத்தைக் கொடுக்கும்போது சிபிஐ அதிகாரிகள் பள்ளி முதல்வரைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து ஆனந்தனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment