Saturday, 7 April 2018

கொழுப்பும் எண்ணெயும் அவசியம்தான்!


கொழுப்பு உள்ள உணவுப் பொருள்களையும் எண்ணெயில் வறுத்துப் பொறிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியத்தில் முழு கவனமாக இருப்பதாகப் பலர் நினைத்துக் கொள்கின்றனர். உண்மைதான். கெட்ட கொழுப்பும், கெட்ட எண்ணெயும்தான் கெடுதல். ஆனால், நல்ல கொழுப்பும் எண்ணெயும் அவசியம்தான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எப்போதுமே உடலின் எல்லா பாகங்களுக்கும் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை கொழுப்புத் திட்டுக்கள் ரத்த நாளங்களில் படிய ஆரம்பத்தால் ஒருகட்டத்தில் ரத்தம் சீராக சென்று வர முடியாது. அதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.

ரத்த நாளத்தில் படியும் திட்டு பல்வேறு பொருள்களால் ஆனது. கொழுப்பு, கொலஸ்ட்ரால், கால்சியம், ஃபிப்ரின் என ரத்தத்தில் கலந்து சுற்றிக் கொண்டிருப்பவை ஆங்காங்கே படிய ஆரம்பிக்கும்.

யாருக்கு எல்டிஎல் எனப்படுகிற கெட்ட கொழுப்பு அதிகமிருக்கிறதோ அவர்களுக்கு இப்படியான அடைப்புகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவையும் ஏற்படக்கூடும்.

அதோடு இப்படிக் கொழுப்பு படிவதால் தொற்று நோய்களும் ஏற்படக்கூடும், இதன் தீவிரம் அதிகரித்தால் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை ஏற்பட்டு உயிர் பிரிவதற்குக்கூட வாய்ப்புகள் உண்டு. அதனால் ரத்த நாளங்களை ஆரோக்கியமாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். நாம் எல்லோரும் அறிந்த ஒன்று மீன் எண்ணெய். நமது உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கிய பங்கு உள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது. கொழுப்பில் கரையும் வைட்டமினான ஏ அதிக அளவு உடலில் சேர்ந்தால் ‘ஹைபர் வைட்டமினோசிஸ்’என்னும் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். இதனால் கல்லீரலில் தேவைக்கு அதிகமான வைட்டமின்கள் சேர்ந்து, சருமம் கரடுமுரடாக மாறுவது, முடி கொட்டுவது போன்றவை ஏற்படும். 20 வயதில் இருந்து 40 வயது வரை உள்ளவர்கள் தினமும் ஒரு மாத்திரை எடுத்துக்கொண்டாலே போதும். 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வைட்டமின்களை விட கால்சியம், மக்னீஷியம், துத்தநாகம் போன்ற தாதுச்சத்துகளே அவசியம். இவர்கள் ஒருநாள் விட்டு மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த எண்ணெயைச் சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில், இதில் உள்ள நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு வைத்திருக்கும். எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயில் சமைத்து உண்டுவந்தால் இதில் உள்ள ஓமேகா ஃபேட்டி ஆசிட்டானது புற்றுநோய் வரவிடாமல் தடுக்கும்.

இந்த எண்ணெயைக் கர்ப்பமான பெண்கள் சமைத்து உண்டுவந்தால் கருவில் இருக்கும் குழந்தைக்குக் கண்பார்வை நன்கு தெரிவதுடன், மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன் கூந்தலும் மினுமினுப்பாக இருக்கும்

No comments:

Post a Comment