Thursday, 12 April 2018

தேர்தல் ஆணையத்துக்கு தனி செயலகம்?


தேர்தல் ஆணையத்துக்கு தனி செயலகம் வேண்டுமென்றும், மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகம் போல, அதன் செலவுகளை மத்திய அரசே ஏற்க வேண்டுமென்றும், உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று கோரி, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய். இதுகுறித்து, உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 12) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது தேர்தல் ஆணையம். அதில், தேர்தல் ஆணையர்களை நீக்குவது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையரே முடிவெடுப்பதற்குப் பதிலாக, உச்ச நீதிமன்றத்திலுள்ள நீதிபதியை நீக்குவதைப் போல புதிய வழிமுறைகள் அமைக்கப்பட வேண்டுமென்று கோரியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்குவதற்கு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் அதுகுறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதோடு, குடியரசுத்தலைவரின் ஒப்புதலையும் பெற்றாக வேண்டும். இதேபோன்ற அதிகாரத்தை தலைமைத் தேர்தல் ஆணையர் பெற்றிருந்தாலும், மற்ற இரு ஆணையர்களும் அதனைப் பெறவில்லை. இதனைக் குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம், தங்களுக்கென தனி செயலகம் அமைக்கப்பட வேண்டுமென பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

“தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக சட்டம் இயற்ற, தற்போதுள்ள அதிகாரங்கள் போதுமானதாக இல்லை. தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்பட தனி செயலகம் தேவை. இதற்கான செலவுகளை, மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகம் போன்று மத்திய அரசின் தொகுப்பு நிதியில் இருந்து பெறுமாறு அமைக்க வேண்டும்.

அரசியல் தலையீடுகளின் காரணமாக, சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலையில் தேர்தல் ஆணையம் உள்ளது. பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியை மாற்றுவதன் மூலமாக, ஆணையத்தில் சுதந்திரத்தன்மையும் அடக்குமுறைகள் இல்லாத செயல்பாடுகளும் உருவாகும்” என்று உச்ச நீதிமன்றத்தில் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது தேர்தல் ஆணையம்.

முன்னதாக, ஒருவரே இரண்டு சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தடைவிதிப்பது தொடர்பான வழக்கு, கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அது தொடர்பாக கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையம், ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடத் தடை விதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்தது. அந்த பொதுநல வழக்கைத் தொடர்ந்தவரும் அஸ்வினி உபாத்யாயா தான்.

No comments:

Post a Comment