Thursday, 5 April 2018

போராட்டங்கள் குறித்து விளக்கம்: முதல்வர்


ஆளுநருடனான சந்திப்பில் தமிழகத்தில் நிலவும் போராட்டச் சூழல் குறித்து எடுத்துரைத்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று மாலை (மார்ச் 4) ஏழு மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.

சந்திப்பின்போது துணை முதல்வர் பன்னீர்செல்வம், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். இதில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சந்திப்புக்கு முன்னதாக தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஆளுநரிடம் காவிரி பிரச்சினை குறித்தும் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தோம். ஆளுநரும் எங்கள் விளக்கம் திருப்தியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கோடைக்காலம் வரவுள்ள சூழ்நிலையில், தண்ணீர் பிரச்சினை குறித்தும் கேட்டறிந்தார். அதற்கு அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளோம்.

அவருக்கு திருப்திகரமாக உள்ள அளவுக்கு நாங்கள் பதிலளித்தோம். என்னையும் துணை முதல்வரையும் அழைத்ததால் வந்தோம். அதிகாரிகளை அழைத்து வராததற்குக் காரணம் ஒன்றுமில்லை” என்ற முதல்வர், “அமைச்சரவையை விரிவுபடுத்தும் எண்ணமில்லை” என்றும் தெரிவித்தார்.

உரிய காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததால், காவிரி டெல்டா விவசாயிகள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் தீவிரமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக இன்று முழு அடைப்பு நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் திருச்சி முக்கொம்பில் காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெறவுள்ளது. தொடர்ச்சியான போராட்டங்களால் பிரதமரின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தின் போராட்டச் சூழல் குறித்து கடந்த 1ஆம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பன்வாரிலால், கடந்த 3ஆம் தேதி பிரதமரைச் சந்தித்தார். அப்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தார். இந்த நிலையில் ஆளுநர் - முதல்வர் சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment