Monday, 9 April 2018

திரண்டன 8 கிராமங்கள்: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!!


ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி இன்று 57 வது நாளாகத் தொடரும் போராட்டத்தில் எட்டு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி குமரெட்டியாபுர கிராம மக்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து போராடிவருகின்றனர்.

இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிற நிலையில், இன்று (ஏப்ரல் 9) எட்டு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அ.குமரெட்டியாபுரம் கிராம மக்களின் போராட்டத்துடன் இந்த ஆலைக்கு அருகாமையில் அமைந்துள்ள பண்டாரம்பட்டி, சில்வர்புரம், சங்கராப்பேரி, மடத்தூர், மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் கல்லூரி மாணவர்களும் வழக்கறிஞர்களும் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கிடையே இன்று 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சைக்கிள் பேரணியில் சென்றனர்.

திருச்செந்தூர் தனியார் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஆட்சியர் நேரில் வராததைக் கண்டித்து தூத்துக்குடி பாளையங்கோட்டை நான்கு வழிச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment