Sunday, 11 March 2018

முதல் பிஎச்.டி பட்டம் பெற்ற பெண்மணி!


மகள், மனைவி, அம்மா, பாட்டி போன்ற நிலைகளில் மட்டுமில்லாமல் இந்தப் பெண் ஒரு திறமையான விஞ்ஞானி, வேதியியல் பேராசிரியர், டென்னிஸ் வீரர், கலைஞர், ஓவியர், சமையல்காரர், எம்பிராய்டரி நிபுணர் மற்றும் சிறந்த கொள்ளுப்பாட்டியாகவும் இருந்தார்.

இவர் வேறு யாருமல்ல; 1939ஆம் ஆண்டில் இந்தியாவில் முதலாவது பிஎச்.டி பட்டத்தை முடித்த நாகமணி குல்கர்னி ஆவார்.

அவருடைய தந்தை இறக்கும்போது நாகமணிக்கு எட்டு வயது. தந்தை சர்மா ராவ் பிரிட்டிஷ் ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றிவந்தார். முதல் உலகப் போரின்போது கடுகு வாயுத் தாக்குதலைக் குணப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பிரிட்டிஷ் ராணுவத்தில் கேப்டனாகப் பணியாற்றிய முதல் பெங்களூரைச் சேர்ந்தவர்களில் அவர் ஒருவராக இருந்தார்.

ஆனால் நாகமணி படிப்பதற்கு அதிக தடைகள் இருந்தன. பெங்களூரில் வாணி விலாஸ் உயர்நிலைப் பள்ளியில் கணிதத்தில் சிறந்த மாணவராக விள்ங்கினார். ஓவியராகவும் பின்னாளில் சிறந்து விளங்கினார். பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள கல்லூரியில் படித்தார்.

எம்.எஸ்சி மற்றும் பிஎச்.டி படிப்பில் முதலில் இருந்தாலும், நாகமணி டென்னிஸ் சாம்பியனாகவே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.

ஐ.ஐ.எஸ்.சி விஞ்ஞானி சரத் அஹுஜா நாகமணியைப் பாராட்டி சில வார்த்தைகளைக் கூறியுள்ளார். பல திறமைகளை தனக்குள் கொண்ட பெண்மணியாக இருந்தபோதிலும்,நாகமணி தனது சாதனைகளை ரகசியமாக வைத்திருக்க அவரது குடும்பத்தினர் கூறினர். ஏனெனில், அப்போதுதான் ஒரு பொருத்தமான மணமகனைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் நாகமணி எதார்த்தத்தைப் புரிந்தவர் என்பதால், திருமண விஷயத்துக்காக தன்னுடைய ஆளுமைகளை மறைக்க முடியாது என மறுத்துவிட்டார். நீண்ட நாட்கள் ஆகவில்லை, விஞ்ஞானி நாகமணி, சக மாணவர் பாபு எஸ்.குல்கர்னியை சந்தித்தார். இவருடன்தான் நாகமணி பிஎச்.டி படிப்பை முடித்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

பிஎச்.டி பட்டம் பெற்ற பிறகு, 1944ஆம் ஆண்டு இருவருமே ஹைதராபாத்துக்குச் சென்றுவிட்டனர். கையில் டாக்டர் பட்டம் இருந்தாலும், உடனடியாக நாகமணியால் வேலை பெற முடியவில்லை. அப்போதைய ஆட்சியாளர் பெண்கள் வேலை செய்யவோ, வேலை தேடவோ கூடாது எனக் கூறியிருந்தார். நாகமணி வேலைபார்க்கும் பெண்ணாக மாறுவதற்கு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியதாகியது.

இவரது கணவர் 1992ஆம் ஆண்டு இறந்தார். இதையடுத்து அவர் தனது மகன் சுரேஷுடன் பிரிக்ஹாம் பகுதிக்குச் சென்றார். அந்த வயதிலும்கூட அவர் விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டினார். 2012ஆம் ஆண்டு அமெரிக்காவில் நாகமணி தன்னுடைய 96 வயதில் இயற்கை எய்தினார். அவர் அடிக்கடி கூறுவது "உலகிலுள்ள அனைத்து மக்களும் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் பெறட்டும்" என்கிற வார்த்தைகளை மட்டுமே.

இவர், பல பெண்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார். அவரது வாழ்க்கையைப் பற்றி அதிகம் வெளிப்படுத்தப்படவில்லை என்பது துரதிர்ஷ்டம் என்றாலும், அவரது வாழ்க்கையிலிருந்து உத்வேகத்தை எடுத்து,வாழ்வில் முன்னேற முயற்சிக்கலாம்.

No comments:

Post a Comment