Friday, 16 March 2018

செவிலியர் ஊதியம்: சுகாதாரத் துறைக்கு உத்தரவு!!!


ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியத்தைச் சரியான தேதியில் கொடுக்கக் கோரி, தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக சுகாதாரத் துறை பதில் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் செவிலியர்களுக்கான ஊதியத்தைத் தமிழக அரசு சரிவர வழங்கவேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், "அரசு மருத்துவமனைக்குத் தான் சிகிச்சை பெறச் சென்றபோது, அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் ஈடுபாட்டுடன் பணி செய்யவில்லை. இது குறித்து தான் விசாரணை நடத்தியபோது, ஒப்பந்த அடிப்படையில் பணிக்குச் சேர்ந்த செவிலியர்களுக்கு மாத ஊதியம் ரூ. 7 ஆயிரம் என்று அரசு நிர்ணயித்துள்ளது. நிரந்தரச் செவிலியர்களுக்கு மாத ஊதியம் ரூ.35 ஆயிரம் என்பதும் தெரியவந்தது.

ஒப்பந்தச் செவிலியர்களுக்கான ஊதியமும் குறித்த தேதியில் வழங்கப்படுவதில்லை என்றும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அரசின் இந்தச் செயல் தொழிலாளர் சட்டத்துக்கு எதிரானது. ஆகவே, அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்தச் செவிலியர்களுக்குக் குறித்த தேதியில் ஊதியம் வழங்கும்படி, சுகாதாரத் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட அமர்வு, இம்மனு குறித்து விரைவில் பதில் அளிக்கும்படி, தமிழக சுகாதாரத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குக் கடந்த ஜனவரியில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment